ஏமனில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு அனைத்து தரப்பினரும் வலுவான ஒத்துழைப்பு தர வேண்டும் - மார்க் லோகத்

Print lankayarl.com in உலகம்

அமைதி பேச்சுவார்த்தை சுமூகமாக தொடங்குவதற்கு அனைத்து தரப்பினரும் வலுவான ஒத்துழைப்பு தர வேண்டும் என ஐ.நாவின் மனித உரிமைகள் தலைவர் மார்க் லோகத் தெரிவித்துள்ளார். ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி தலைமையிலான அரசு படைகளுக்கும் இடையே நீடித்து வரும் சண்டை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் மன்சூர் ஹைதிக்கு சவுதி அரேபியாவும், ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரானும் ஆதரவு அளிக்கின்றன. தற்போது தலைநகர் சனா உட்பட பெரும்பான்மை பகுதி ஹவுத்தி கிளர்ச்சிப் படையின் வசம் உள்ளன. அங்கு நிலவி வரும் கடும் போரால் உணவு பொருட்களின் வரத்து குறைந்திருப்பதால் நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுமார் 1 கோடியே 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு போர் நிறுத்த நடவடிக்கையில் ஐ.நா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் சண்டை நிறுத்தத்திற்கு இரு தரப்பும் சம்மதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை சுவீடனில் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து தரப்பும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஐ.நாவுக்கான மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் மார்க் லோகத் வலியுறுத்தியுள்ளார். சனா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், துறைமுக நகரமான ஹொதைதாவில் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தால் தான் தொண்டு நிறுவனங்களின் உதவி பணிகள் எளிதாக நடக்கும் என கேட்டுக் கொண்டுள்ளார்.